விபத்தில் உயிரிழந்த வாலிபர்களின் உறவினர்கள் சாலை மறியல்
செங்கம் அருகே விபத்தில் உயிரிழந்த வாலிபர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்
செங்கம் அருகே கொட்டகுளம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் அரவிந்த் மற்றும் ரோகன் ஆகிய 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து செங்கம் போலீசார் முறையாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக சென்ற போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.
பின்னர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.