நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியல்
விபத்தில் தொழிலாளி இறந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
விபத்தில் தொழிலாளி இறந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கொலை என குற்றச்சாட்டு
துறையூர் அருகே உள்ள தெற்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு துறையூரில் இருந்து காளிப்பட்டி செல்லும் பாதையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, கீழே விழுந்து காயம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கி உயிர் இழக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டார் எனவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் அவரை அடித்துக்கொன்ற அம்மாபட்டியை சேர்ந்த 3 பேரை கைது செய்ய கோரி துறையூர் போலீஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
பரபரப்பு
இதனிடையே மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையம் அருகே வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அந்த வாகனங்களுக்கு போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்தனர். விசாரணை காலதாமதமாக நடைபெறுகிறது என்பதை கேட்க வந்ததற்காக எங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து விட்டனர். கூலி வேலை செய்துவரும், நாங்கள் இந்த தொகையை எப்படி செலுத்துவோம் என புலம்பியபடி சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.