இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் மறியல்
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் இறந்ததால் அதிருப்தி அடைந்த அவரது உறவினர்கள் கரூர்- திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இளம்பெண் பலி
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர் முகேஷ் குமார் (வயது 27), கொத்தனார். இவருடைய மனைவி ஜோதி (27). இவர்களுக்கு சிவானி (5), ரிதன்யாஸ்ரீ (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோதி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நேற்று முன்தினம் ஜோதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த ஜோதி முற்றிலும் சுயநினைவை இழந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முகேஷ் குமார் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ேஜாதி இறந்ததால் அதிருப்தி அடைந்த அவருடைய உறவினர்கள் ஜோதியின் உடலை வாங்க மறுத்தும், அவரது சாவுக்கு காரணமான டாக்டர் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தினர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அவர்கள் கரூர்- திருச்சி சாலையில் காந்திகிராமத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் ஜோதியின் சாவுக்கு காரணமான டாக்டர் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை அவரது உடலை வாங்கமாட்டோம் என கூறினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.