மனைவியை தவறாக பேசிய உறவினர்கள் - தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை


மனைவியை தவறாக பேசிய உறவினர்கள் - தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை
x

மாதவரம் அருகே ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் உறவினர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.

சென்னை


சென்னை, மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 34). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மணலி சின்னசாமி நகரில் வசிக்கும் மோகனின் சகோதரர் செந்தில், மோகனை பார்க்க நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மோகனை கண்ட அவர் இது தொடர்பாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் இறந்து கிடந்த மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது,

மோகன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உறவினர்களான‌ அதே பகுதியை சேர்ந்த பிரபு (38), ஜெயகுமார் (34) மற்றும் சில நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

அப்போது பிரபுவும், ஜெயகுமாரும் மோகனின் மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.அப்போது பிரபுவும், ஜெயகுமாரும் மது பாட்டிலால் மோகனை கடுமையாக தாக்கிய நிலையில் மோகன் மயங்கியுள்ளார். பின் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களது உறவினர்களான பிரபு , ஜெயகுமாரை கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story