ஊழல் பட்டியல் வெளியீடு: தி.மு.க. அரசு எங்கள் மீது கோபத்தை காட்ட நினைத்தால் எதிர்கொள்ள தயார் -மதுரையில் அண்ணாமலை பேட்டி


ஊழல் பட்டியல் வெளியீடு: தி.மு.க. அரசு எங்கள் மீது கோபத்தை காட்ட நினைத்தால் எதிர்கொள்ள தயார் -மதுரையில் அண்ணாமலை பேட்டி
x

ஊழல் பட்டியலை வெளியிட்டதற்காக தி.மு.க. அரசு எங்கள் மீது கோபத்தை காட்ட நினைத்தால், அதை எதிர்கொள்ள தயார் என மதுரையில் அண்ணாமலை கூறினார்.

மதுரை


ஊழல் பட்டியலை வெளியிட்டதற்காக தி.மு.க. அரசு எங்கள் மீது கோபத்தை காட்ட நினைத்தால், அதை எதிர்கொள்ள தயார் என மதுரையில் அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை பேட்டி

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் பாதயாத்திரை தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் ராமேசுவரத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமேசுவரத்தில் பா.ஜனதா கட்சியின் சார்பில் பாதயாத்திரை தொடங்க இருக்கிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார். இதுபோல், பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரண்டு வருகிறார்கள்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, "என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்" என்ற பெயரில் இந்த பாதயாத்திரை நடக்க இருக்கிறது.

தமிழகத்தில் 5 பகுதியாக நடக்கும் இந்த யாத்திரையின் மூலம் 234 தொகுதிகளுக்கும் செல்கிறோம். மூத்த தலைவர்கள் இதனை வழிநடத்துவார்கள். ஆகஸ்டு 22-ந்தேதி வரை நடக்கும் முதல் பகுதி யாத்திரைக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். கட்சியின் மாநில தலைவராக நான் எல்லா இடத்திலும் கலந்துகொள்கிறேன்.

1 லட்சம் புத்தகம் வினியோகம்

ஊர்ப்பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பஸ் மூலம் 900 கி.மீ. தூரமும் இந்த யாத்திரை நடக்கும். 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

இதில் பங்கேற்க கூட்டணி தலைவர்கள் எல்லோரையும் அழைத்திருக்கிறோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவர் வேறு ஒரு நாளில் கலந்துகொள்வார்.

3-வது முறயைாக மோடி பிரதமராக ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காகவும், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காகவும்தான் இந்த யாத்திரை நடக்கிறது. இது பா.ஜனதாவின் யாத்திரை என்று சொல்வதைவிட மோடி மீண்டும் பிரதமராவதற்கு தமிழக மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.

யாத்திரையின்போது, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், கடந்த 9 ஆண்டு கால மத்திய பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேசப்படும். யாத்திரையின் தொடக்க விழாவில் மோடி என்ன செய்தார்? என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்படுகிறது. ராமேசுவரத்தில் ஒரு லட்சம் புத்தகம் வினியோகிக்கப்பட இருக்கிறது.

மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், மோடி ஆட்சியில் வந்துள்ள மாற்றங்கள் குறித்தும் பேசப்படுகிறது. யாத்திரையின்போது 10 மாநகரங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன.

அந்த கூட்டங்களில் சில முக்கியமான தலைவர்கள் வருகிறார்கள். எல்லா பொதுக்கூட்டங்களிலும் மத்திய அரசின் சார்பாக மத்திய மந்திரிகள் வருவார்கள். குறிப்பாக எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த திட்ட பயனாளிகள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த துறை சார்ந்த மந்திரிகள் வர இருக்கிறார்கள். நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என கட்சி நினைக்கிறது.

மீனவர் பிரச்சினை

ராமேசுவரத்தில் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு செய்தது என்னென்ன? என்பது பற்றி பேச இருக்கிறோம்.

என்.எல்.சி. விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம் பேசி இருக்கிறோம். விளைநிலங்களில் எந்திரங்கள் மூலம் பயிர்களை அழித்து, நிலங்களை கையகப்படுத்துவதை ஏற்க முடியாது. மாநில அரசின் அதிகாரிகள் இந்த நேரத்தில் நிலத்தை கையகப்படுத்துவது முறையல்ல. நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. அதனை கடைபிடித்திருக்க வேண்டும். என்.எல்.சி. விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது. அதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் கோரிக்கை.

தி.மு.க. ஊழல் பட்டியல் குறித்து கவர்னரிடம் ஆவணங்களுடன் பெட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 6 அமைச்சர்கள் உள்பட அவர்களின் பினாமிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கவர்னரிடம் கொடுத்திருக்கிறோம். பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஊழல் குறையும்.

எழுதி கொடுப்பதைத்தான் முதல்-அமைச்சர் ஆக்ரோஷமாக வாசிக்கிறார். அமைச்சர் பொன்முடியின் 41 கோடி ரூபாய் வைப்பு நிதி குறித்து அவர் ஏன் பேசுவதில்லை? வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்.

எதிர்கொள்ள தயார்

தி.மு.க. ஊழல் பட்டியலை வெளியிட்டதற்காக எங்கள் மீது தி.மு.க. கோபத்தை காட்ட நினைத்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பா.ஜனதாவை மிரட்ட நிர்வாகிகள், தொண்டர்களை கைது செய்ய முயற்சிப்பார்கள்.

ஆனால், நாங்கள் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

மணிப்பூர் விவகாரம்

மணிப்பூரில் பழங்குடியை சேர்ந்த இருதரப்பினருக்கிடையே பிரச்சினை உள்ளது. மணிப்பூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துவது தீர்வாகாது. மணிப்பூர் மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் வேண்டும் என நினைக்கிறோம். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story