கரூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு


கரூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு
x

கரூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர்

வாக்குச்சாவடி மையங்கள் பட்டியல்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2023-ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திடும் பொருட்டு ஏற்கனவே உள்ள 1,045 வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

1,046 வாக்குச்சாவடிகள்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 253 வாக்குச்சாவடிகளும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 258 வாக்குச்சாவடிகளும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் என 1,045 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் கரூர் சட்டமன்ற தொகுதியில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையத்தை பிரித்து கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தையும் சேர்த்து மொத்தம் 1,046 வாக்குச்சாவடிகள் உள்ளது.கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திட ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால், கீழ்காணும் காரணிகளின் அடிப்படையில் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்குச்சாவடி மையங்களின் விவரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களின் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியவை, வாக்குச்சாவடி மையங்களின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டியவை, வாக்குச்சாவடி மையங்களை புதிதாக உருவாக்குதல், இணைத்தல், மாறுதல் செய்திட இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும், வாக்காளர்களின் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்திற்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதில் கரூர் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 252-ல் (காளியப்பகவுண்டனூர்) 1,519 வாக்காளர்கள் உள்ளதால் மேற்படி பாகம் எண் 252-யினை இரண்டாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருகிற 6-ந்தேதிக்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி மறுவரையறை செய்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரைக்குட்பட்ட ஒரு தேதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்த தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

ஒத்துழைப்பு வேண்டும்

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக வருகிற செப்டம்பர் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமினை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன் பெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதின், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), புஷ்பாதேவி (குளித்தலை) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story