அடவிநயினார் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அடவிநயினார் அணையில் இருந்து கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு நேற்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் 16-ந் தேதி வரை 150 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கனஅடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அடவிநயினார் அணையில் இருந்து கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
இதன்மூலம் அடவிநயினார் அணையில் இருந்து பாசனம் பெறும் மேட்டுக்கால்வாய், கரிசல் கால்வாய், பண்பொழி கால்வாய், வல்லாக்குளம் கால்வாய், இலத்தூர் கால்வாய், நயினாரகரம் கால்வாய், கிளங்காடு கால்வாய், கம்பளி கால்வாய், புங்கன் கால்வாய், சாம்பவர்வடகரை கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் மொத்தம் 7,643.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஜாகிர் உசேன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஷெரீப், விவசாய சங்க நிர்வாகிகள் முகம்மது இஸ்மாயில், வாவாமைதீன், மன்சூர், தங்கம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.