குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்


குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்
x

குடகனாறு அணையில் ஷட்டர்களை பழுது பார்க்கும் பணி நடைபெறுவதையொட்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடகனாறு அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பை ஆறு, மாங்கரை ஆறு மற்றும் ஆத்தூர் காமராஜர் அணை ஆகியவற்றில் இருந்து குடகனாறு வழியாக இந்த அணைக்கு தண்ணீர் வந்து சேரும். 27 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,663 ஏக்கர் நிலமும், கரூர் மாவட்டத்தில் 5,337 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன.


15 ஷட்டர்கள் கொண்ட இந்த அணையில் பராமரிப்பு பணி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் அணையில் 17 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஷட்டர்களை பழுது பார்க்கும் பணி தொடங்கியது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.


இந்தநிலையில் தற்போது தொடர்மழை பெய்து வருகிறது. ஆனால் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி முடிவடையாததால் இந்த ஆண்டும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் டி.ராமசாமி கூறும்போது, பராமரிப்பு பணி என்ற பெயரில் அணையில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றுவது தொடர்கதையாகி விட்டது. அணையின் உட்பகுதியில் மண் கரை அமைத்து 10 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்து ஷட்டர் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்றார்.Next Story