குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x

பாசனத்துக்காக குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு

டி.என்.பாளையம்

பாசனத்துக்காக குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

குண்டேரிப்பள்ளம் அணை

டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சியில் குன்றி மலையடிவாரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம், கடம்பூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடையும்.

42 அடி உயரமுள்ள இந்த அணையில் 41.75 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை தண்ணீர் மூலம் குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மூலவாய்க்கால் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் இரு போக பாசன வசதி பெற்று வருகின்றன.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் கன மழை பெய்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. அதனால் உபரி நீர் வெளியேறியது.

இதையடுத்து குண்டேரிப்பள்ளம் அணையை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்த விவசாயிகள் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தனகிரி மற்றும் விவசாயிகள், பாசன சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை வாய்க்கால்களுக்கு மதகுகளில் இருந்து ஷட்டரை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் 57 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story