பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நீலகிரியில் தொடர் மழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
நீலகிரியில் தொடர் மழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாகும்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 97 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின்் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
இதனைத்தொடர்ந்து நேற்று கலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 97 அடியில் ஒரே சீராக வைத்திருக்க அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
அணையின் 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 4000 கனஅடி தண்ணீரும், மின் உற்பத்திக்காக அணையில் ஒரு இயந்திரத்தை இயக்கியதில் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. யாரும் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.






