மீனவர்களுக்கான நிவாரண தொகையைஉயர்த்தி வழங்க நடவடிக்கை


மீனவர்களுக்கான நிவாரண தொகையைஉயர்த்தி வழங்க நடவடிக்கை
x

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை

பால் உற்பத்தி குறைவு

புதுக்கோட்டையில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் கால்நடை பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை பண்ணையில் ஆய்வு மேற்கொண்டதில் பால் உற்பத்தி குறைவாக இருப்பது தெரிந்தது. இதேபோல பசுந்தீவனம் உற்பத்தியிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் தான். இதனை நிவர்த்தி செய்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும். புதிய பசு மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வெண் பன்றிகளை வாங்கி வெண் பன்றிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த மாடுகளை கழிப்பதற்கும், புதிய மாடுகளை வாங்கவும், தண்ணீர் அதிகமாக கொண்டு வரவும், உரிய அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிவாரண தொகை

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பால் உற்பத்தி குறையவில்லை. பால் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தனியார் பால் பண்ணையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். இருப்பினும் ஆவினில் பால் தட்டுப்பாடின்றி கொடுக்கப்படுகிறது. கால்நடைகளில் பசுந்தீவனம் உற்பத்தியை அதிகரித்து, பால் உற்பத்தியை அதிகரிக்கப்படும். கால்நடை பண்ணைகள் புத்துயிர் பெற பணிகள் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் கால்நடை மருத்துவ கல்லூரி வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. தேவைப்படுகிற நேரத்தில் முதல்-அமைச்சர் அறிவிப்பார். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக மீனவர்களின் படகுகள்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தப்படும். மீனவர்களுக்கு டீசல் மானியம் கூடுதலாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் காலங்களில் விசைப்படகு மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்படும். ஜல்லிக்கட்டுகளில் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு முறை என்பது காளைகள் அதிகமாக வருவதால் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான முறையில் சட்டப்போராட்டம் நடத்தினார். அதனால் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவர் புதுக்கோட்டை மச்சுவாடியில் 694 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கால்நடை பண்ணையில் பசுமாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், அப்துல்லா எம்.பி., முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

1 More update

Next Story