சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி


சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி
x

கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்க இருப்பதாக கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.50 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் காரணமாக 2 வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கிடும் வகையில் 2022-2023-ம் ஆண்டிற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலிந்த தொழில்முனைவோருக்கு நிவாரண உதவி வழங்கி மீண்டும் தொழில்களை நிறுவிட, புதிய நிறுவனத்தை தொடங்கிட அல்லது பாதிக்கப்பட்ட நபரின் சட்டப்பூர்வமான வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

2020-2021-ல் கொரோனா தொற்றால் பொருளாதார வீழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குறிப்பாக தனிநபர்கள், உரிமையாளர்கள் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன்மூலம் பயன்பெறலாம். அதிகபட்ச திட்ட செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாகவும் இருக்கும். மானியத்துடன் இணைக்கப்பட்ட திட்டத்துக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமில்லை.

நவீனமயமாக்கல்

மேலும் 2-வதாக ஊக்குவிப்புத் திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஊக்க திட்டத்திற்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கலை மேற்கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மானியத்துக்கு தகுதியுடையவர்கள். மூலதன மானியமாக ஆலை மற்றும் எந்திரங்களின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.25 லட்சத்துக்குட்பட்டு வழங்கப்படும்.

இத்திட்டம் 2022-2023-ம் ஆண்டுக்கு மட்டும் நடைமுறையில் இருக்கும். மேலும் இதுபற்றிய விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண் 95/2A2, ராஜாநகர், கள்ளக்குறிச்சி, அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது 04151-294057 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இப்பிரிவின்கீழ் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு வழங்கும் இந்தஅரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story