7 பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி


7 பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி
x

நாட்டறம்பள்ளி அருகே நடந்த விபத்தில் இறந்த 7 பெண்களின் குடும்பத்திற்கு அமைச்சர் துரைமுருகன் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

வேலூர்

நிவாரண உதவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்ற சுற்றுலா வேன் மீது மினி லாரி மோதியதில் பேரணாம்பட்டு, ஓணாங்குட்டை பகுதியை சேர்ந்த செல்வி என்ற சேட்டம்மாள், சாவித்திரி, தெய்வானை, கலாவதி, மீரா, தேவகி, கீதாஞ்சலி ஆகிய 7 பெண்கள் உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்

இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு நேரடியாக சென்று விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தமிழக அரசின் நிவாரண நிதி தலா ரூ.1 லட்சம் வழங்கினார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், சப்- கலெக்டர் வெங்கட்ராமன், எம்.பி.க்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலு விஜயன், வில்வநாதன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், டேவிட், நகர தி.மு.க. செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹம்மத் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story