பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் வழங்கினார்
பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.
தர்மபுரி:
பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.
தேர் கவிழ்ந்து 2 பேர் பலி
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. அப்போது தேர் கவிழ்ந்த விபத்தில் 2 பக்தர்கள் பலியாகினர். இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தேர் சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களுக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர்களுடைய குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேருக்கு ஆறுதல் கூறி தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். அப்போது செந்தில்குமார் எம்.பி., ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
நேரில் ஆய்வு
இதைத்தொடர்ந்து மாதேஅள்ளி கிராமத்திற்கு சென்று தேர் கவிழ்ந்து விபத்து நடந்த பகுதியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில் தேர்த்திருவிழா நடந்தபோது தேர் கவிழ்ந்த விபத்து எதிர்பாராமல் நடந்த சோகம். திருவிழா பாதுகாப்பு தொடர்பாக கடந்த 8-ந்தேதி பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் விழாக்குழுவினரை அழைத்து முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய ஆய்வு நடத்திய பின் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
விசாரணை நடத்தப்படும்
இந்த நிலையில் எதிர்பாராமல் தேரின் அச்சாணி கழன்று 2 சக்கரங்கள் கழன்று கொண்டதால் தேர் கவிழ்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை மூலம் விசாரணை நடத்தப்படும். தேர்த்திருவிழாக்கள் நடத்தும்போது அரசு விதிமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இந்த பாதுகாப்பு விதிமுறைகளை தேர்த்திருவிழா நடத்தும் மக்கள் முறையாக பின்பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மசெல்வன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஆ.மணி, தாசில்தார் அசோக்குமார், பேரூராட்சி தலைவர் பிருந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.