குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் நிவாரணம்: வேளாண் துறை அறிவிப்பு


குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் நிவாரணம்: வேளாண் துறை அறிவிப்பு
x

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டது. 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த சூழலில், டெல்டா உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று வேளாண் துறை அறிவித்து உள்ளது.

சம்பா பயிர்களுக்கு மட்டும் காப்பீடு செய்யப்படுகிறது. குறுவை பயிர்கள் காப்பீடு செய்யப்படுவதில்லை. எனினும், விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் மூலமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய்யப்படும். பின்னர் நிவாரணத்தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story