வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் ரூ.4,800 நிவாரணம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி


வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் ரூ.4,800 நிவாரணம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
x

கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்தால் தலா ரூ.95 ஆயிரமும், வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் 4 ஆயிரத்து 800 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை வரும் என்ற சொன்ன உடனேயே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 26-ந் தேதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து பேசி முதலில் இருந்தே தயார்நிலையில் இருந்த காரணத்தினால்தான் மழையால் ஏற்படும் பாதிப்பு குறைந்திருக்கிறது.

உதாரணமாக சென்னையில் எங்குமே தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு முதல்-அமைச்சரின் நேரடி பார்வைதான் காரணம்.

கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளுக்கு முதல்-அமைச்சரே நேரடியாக சென்றார். அதற்கு முன்பாக கடலூரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோரை அங்கே இருந்து பார்வையிட சொல்லியிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், செந்தில்பாலாஜி ஆகியோர் நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார். மழைக்கால பணிகளை முதல்-அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்யும் காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால்...

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும்? என்று அரசாங்கத்தில் ஒரு வரையறை இருந்தால் கூட, முதல்-அமைச்சர் வந்த பிறகுதான் அதற்கான முடிவு தெரியும்.

அரசு கணக்கீட்டின்படி பார்த்தால், வீட்டுக்குள் மழைநீர் உள்ளே வந்திருந்தால் ரூ.4 ஆயிரத்து 800, குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5 ஆயிரம், பகுதியாக இடிந்திருந்தால் ரூ.4 ஆயிரத்து 100, கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் ரூ.95 ஆயிரம் என்பதுதான் இப்போது இருக்கும் அரசின் விதிகள்.

மழை பாதிப்புகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு வந்த பின்னர், இந்த தொகைகளை உடனடியாக வழங்குவதற்கான பணிகளை செய்வோம். குறிப்பாக விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழைநீர் வடிந்த உடனேயே நம்முடைய முதல்-அமைச்சரிடம் கலந்துபேசி, அதிகாரிகளை துரிதப்படுத்தி நெல் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதற்கான பணிகளை செய்ய காத்திருக்கிறோம்.

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 99 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 52 ஆயிரத்து 751 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு வேண்டிய உணவு, படுக்கை வசதியை உடனடியாக வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் அந்த பணிகளை செய்து வருகிறது. அடுத்து ஓரிரு நாளில் வரும் என்று கூறப்பட்டிருக்கும் மழையை எதிர்கொள்வதற்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும் நாங்கள் எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். இப்போது எப்படி மழையை எதிர்கொண்டோமோ, அதை விட திறமையாக வருங்காலங்களில் மழையை நாங்கள் எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிர்சேதம் கணக்கெடுப்பு

இதற்கிடையே அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மயிலாடுதுறை, கடலூர் உள்பட 24 மாவட்டங்களில் பயிர் சேதங்களை கணக்கிடும் பணியை தொடங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு்ள்ளது' என்று கூறியுள்ளார்.


Next Story