உயிரிழந்த அ.தி.மு.க.வினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


உயிரிழந்த அ.தி.மு.க.வினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

மதுரை மாநாட்டுக்கு வரும்போது நடந்த எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த அ.தி.மு.க.வினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு கடந்த 20-ந்தேதி மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக,

விழுப்புரம் மாவட்டம் வல்லம் வடக்கு ஒன்றிய இலக்கிய அணி இணைச் செயலாளர் பி.பொன்னுசாமி, திருப்பத்தூர் மாவட்டம் மண்டல நாயனகுண்டா ஊராட்சி பத்திரிகானூர் கிளை செயலாளர் சென்னையன், கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் சி.கதிரேசன், பெரியநெகமம் பேரூராட்சி 13-வது வார்டு அவைத் தலைவர் எஸ்.பழனிச்சாமி, நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தென்காசி மாவட்டம் குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வாசுதேவன், விருதுநகர் மாவட்டம் லட்சுமியாபுரம் கிளை நிர்வாகி கடற்கரை, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சாம்பசிவம் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும், வாகனங்களில் செல்லும் போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

வேதனையில் ஆழ்த்துகிறது

கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சாலைகளில் பயணம் செய்யும்போது, மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது நான் வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற விரும்பத்தகாத விபத்துகள் நடைபெற்று கட்சியினர் உயிரிழப்பதும், காயங்கள் அடைவதும், மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.

கட்சியின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த பொன்னுசாமி, சென்னையன், கதிரேசன், பழனிச்சாமி, மாரிமுத்து, வாசுதேவன், கடற்கரை மற்றும் சாம்பசிவம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தலா ரூ.6 லட்சம் நிவாரணம்

மேலும், அவர்களது குடும்பத்திற்கு கட்சி சார்பில் தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே போல், வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கட்சி சார்பில் தலா ரூ.1½ லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story