மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம்


மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

சீர்காழி-தரங்கம்பாடி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி-தரங்கம்பாடி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தை கலெக்டர் லலிதா வழங்கினார்.

நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி

கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் வசிக்கும் 1 லட்சத்து 61 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய தாலுகாவில் நிவாரண தொகை வழங்கும் பணிகள் தொடங்கின. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மணிகிராமம் ரேஷன் கடையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல். ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாள விநாயகம் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலரும், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பஞ்சுகுமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது கடந்த 11-ந்தேதி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் நிவாரணம்

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும். தற்போது மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், இறந்த கால்நடைகள் பற்றி கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்ததும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். கடந்த தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதி விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, கூட்டுறவு துணைப் பதிவாளர் ராஜேந்திரன், தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

தலைச்சங்காடு

இதேபோல் தலைச்சங்காடு, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய இடங்களில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காட்டில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண உதவி வழங்கி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் வெண்ணிலா தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story