மத நல்லிணக்க நிகழ்ச்சி


மத நல்லிணக்க நிகழ்ச்சி
x

ராசிபுரம் அருகே மத நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சாமி ஊர்வலம் நடந்தது. கடந்த 5-ந் தேதி சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் தேரோட்டமும், நேற்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக முஸ்லிம்கள்-இந்துக்கள் ஒன்றுகூடி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம் கிழக்கு பள்ளிவாசல் தலைவர் முத்தவல்லி உசேன், துணைத் தலைவர் காதர் பாஷா, அச்சுக்கட்டி பள்ளிவாசல் நிர்வாகிகள் சேக் அகமது, அப்துல் அஜீத், சித்திக் அலி, ஆசாத், அசீத் மற்றும் இப்ராகிம் உள்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் பழம், தேங்காய், பூ தட்டுடன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்களை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.

பிறகு சந்தைப்பேட்டை மைதானத்தில் உள்ள கொடி மரத்தடியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கொடிமரத்தில் முஸ்லிம்கள் வெள்ளைக் கொடியை ஏற்றி வைத்தனர். அதன் பிறகு நடந்த சந்தனப் பூசும் நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் முத்தவல்லி உசேனும், ஊர்பெரியதனக்காரர் ராஜேந்திரனும் ஒருவருக்கு ஒருவர் சந்தனம் பூசி, மாலை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

தேங்காய், பழம், நாட்டுச்சர்க்கரை, பொட்டுக்கடலை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர்.


Next Story