இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

தஞ்சை வடபத்ரகாளியம்மன் கோவில் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர்

தஞ்சை வடபத்ரகாளியம்மன் கோவில் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கோவிலுக்கு சொந்தமான இடம்

இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான வடபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட பூமாலை வைத்தியநாதசாமி கோவில். வடவாற்றங்கரையில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில்களின் குடமுழுக்கு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கோவில்கள் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். விஜயாலய சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் ஆகும்.

இதில் வடபத்ரகாளியம்மன், வைத்தியநாதசாமி கோவில்களுக்கு அருகே அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் பலர் வீடுகள் கட்டி 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்கள். மேலும் இந்த வீடுகளுக்கு அருகே கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் இடம் உள்ளது.அந்த இடத்திற்குசெல்வதற்கு கூட வழி இல்லாத நிலை இருந்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றி விட்டு, அதன் அருகே உள்ள இடத்தில்கோவிலுக்கு வருபவர்கள் வாகனங்கள் நிறுத்தவும், அன்னதானம் வழங்குவதற்கும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்வது என தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி நேற்று மாநகராட்சி ஏற்பாட்டின் பேரில் ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டன. அதன்படி முதல் கட்டமாக 5 வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டு இன்று குடமுழுக்கு நடத்துவதற்கு வசதியாகவும், வழி ஏற்படுத்தும் வகையிலும் இடையூறாக இருந்த வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மாநகராட்சி நகரமைப்பு உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் தலைமையில் உதவி பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு உடனடியாக கட்டடி இடிபாடுகள் அகற்றப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரும் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர், அதன் அருகே உள்ள இடத்தையும் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


Next Story