தோகைமலை அருகே 50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


தோகைமலை அருகே 50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

தோகைமலை அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 50 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

கரூர்

கொசூர் கடைவீதி

தோகைமலை அருகே தொண்டமாங்கிணம், மத்தகிரி, கொசூர் ஆகிய 3 ஊராட்சிகளை இணைக்கக்கூடிய மையப்பகுதியாக கொசூர் அமைந்து உள்ளது. இதேபோல் திருச்சி பாளையம் மெயின் ரோடு மற்றும் வீரப்பூர் மெயின் ரோடு இணையும் மையப்பகுதியில் கொசூர் கடைவீதி அமைந்து உள்ளது. இதில் பாளையம் மெயின் ரோட்டின் தென் பகுதி மற்றும் வீரப்பூர் மெயின் ரோட்டின் மேற்கு பகுதியில் மத்தகிரி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும், திருச்சி மெயின் ரோட்டின் தென் பகுதி மற்றும் வீரப்பூர் மெயின் ரோட்டின் கிழக்கு பகுதியில் தொண்டமாங்கிணம் ஊராட்சி நிர்வாக கட்டுப்பாட்டிலும், திருச்சி பாளையம் மெயின் ரோட்டின் வடக்கு பகுதியில் கொசூர் ஊராட்சி நிர்வாக கட்டுப்பாட்டிலும் அமைந்து உள்ளது.

இதனால் தொண்டமாங்கிணம், மத்தகிரி, கொசூர் ஆகிய 3 ஊராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக கொசூர் மற்றும் கொசூர் வழியாக செல்வது வழக்கம்.

50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

இந்தநிலையில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். ஆனால் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கடைகளை அகற்றாமல் இருந்தனர். இதனைதொடர்ந்து கடவூர் தாசில்தார் முனிராஜ், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கோகுல்நாத் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் 50 ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர்.

மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கான்கிரீட் மற்றும் ஆஸ்பிட்டாஸ் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அளவீடு செய்தனர். பின்னர் கட்டிட உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story