வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்


வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்
x

கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்க உள்ளதால் அங்கு ஆக்கிரமித்து இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்க உள்ளதால் அங்கு ஆக்கிரமித்து இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குளங்கள் சீரமைப்பு

கோவை மாநகர பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி, முத்தண்ணன் குளம் உள்பட பல குளங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைத்து அவற்றின் கரைகளை பலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. உக்கடம் குளத்தில் படகு சவாரி விடவும் முடிவு செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் சில படகுகளும் வாங்கப்பட்டு அவை உக்கடம் குளத்தில் நிறுத்தப்பட்டன.

ஆனால் படகு சவாரி இன்னும் தொடங்கப்படவில்ைல என்பதால் விரைவில் படகு சவாரியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி இருந்தனர்.

படகு சவாரி

இந்த நிலையில் கோவை வாலாங்குளத்தில் மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகியவை சார்பில் படகு சவாரி விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் இதற்காக அங்கு டிக்கெட் கவுண்ட்டர்களும் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் வாலாங்குளத்தில் படகு சவாரி செய்யும் இடத்தில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து இருந்தன. அவற்றை அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. பொக்லைன் எந்திரம் மூலம் குளத்துக்குள் பரவி கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஆகாயதாமரைகள் அகற்றம்

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ரூ.67 கோடியே 86 லட்சத்தில் வாலாங்குளம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு வாட்டர் சைக்கிள் படகு, பெடல் படகு, அதிவேகமாக செல்லும் மோட்டார் படகு உள்பட பல்வேறு படகுகள் விடப்பட உள்ளன. இதற்காக குளத்தில் பரவிகிடக்கும் ஆகாயதாமரைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் விரைவில் படகு சவாரி தொடங்கப்படும் என்றனர்.


Next Story