பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் கல்குவாரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் -அரசாணை வெளியீடு


பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் கல்குவாரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் -அரசாணை வெளியீடு
x

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் கல்குவாரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் -அரசாணை வெளியீடு.

சென்னை,

தமிழக தொழில்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

3.11.2021 அன்று தொழில்துறை சட்டத்திருத்தத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்து அரைப்பது போன்ற குவாரிப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே அந்த தூரத்துக்குட்பட்ட பல குவாரிகள் செயல்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சுரங்கத்துறை மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், குவாரி தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது. அரசுக்கு கிடைக்கும் வருவாய், குவாரி மற்றும் சுரங்கம் தோண்டும் உரிமம் பெற்றவர்களின் கோரிக்கையின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் குவாரி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்வது தொடர்பான கருத்துருவை அனுப்பும்படி நீர்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து குவாரி மற்றும் சுரங்கம் தோண்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தமிழ்நாடு சிறு கனிமங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்படி, தமிழக அரசுக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் கருத்துரு அனுப்பினார். இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்படாது. ஆனால் இந்த பகுதிகளை தவிர்த்து, மற்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்குள் சுரங்கம் மற்றும் குவாரி செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


Next Story