கெடிலம் ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றும் பணி


கெடிலம் ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றும் பணி
x

கடலூர் கெடிலம் ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர்

கடலூர்,

குப்பை மேடு

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கம்மியம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது அந்த குப்பை கிடங்கு மூடப்பட்டுள்ளதால், துப்புரவு ஊழியர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை அந்தந்த பகுதியிலேயே கொட்டி தீ வைத்து கொளுத்துகின்றனர். மேலும் வாகனங்கள் மூலம் அள்ளப்படும் குப்பைகள் கெடிலம் ஆற்றங்கரையிலும், நத்தவெளி சாலையோரமும் கொட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஜவான்-பவன் சாலையில் கெடிலம் ஆற்றங்கரை முழுவதும் குப்பை மேடாக காணப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கெடிலம் ஆற்றங்கரை மற்றும் நத்தவெளி சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் 'எனது குப்பை, எனது பொறுப்பு' என்ற திட்டத்தினை முதல்-அமைச்சர் நேற்று தொடங்கி வைத்ததன் அடிப்படையில், இத்திட்டத்தின் முன்னேற்பு பணி கடலூரில் நடந்தது.

அகற்றும் பணி

அதன்படி கடலூர் கெடிலம் ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டருடன், மாநகராட்சி மேயர் சுந்தரியும் சேர்ந்து குப்பைகளை அள்ளி பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஆற்றில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் விஸ்வநாதன், நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, தி.மு.க. நகர செயலாளர் ராஜா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story