வாய்க்காலில் ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்களை அகற்றும் பணி


வாய்க்காலில் ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்களை அகற்றும் பணி
x

தாந்தோணி கிளை வாய்க்காலில் ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்களை அகற்றும் பணி தொடங்கியது.

கரூர்

கிளை வாய்க்கால்

கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் ராஜ வாய்க்கால் மூலம் நகர பகுதிகளை சுற்றிய பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு நீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ராஜ வாய்க்காலில் இருந்து சிவசக்தி நகர் பகுதியில் இருந்து தாந்தோணி கிளை வாய்க்கால் தனியாக பிரிந்து, கருப்பகவுண்டன்புதூர் வழியாக சென்று சணபிரட்டையில் மீண்டும் ராஜ வாய்க்காலுடன் இணையும் வகையில் கிளை வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

இந்த தாந்தோணி கிளை வாய்க்கால் பகுதியில் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நீர்வளத்துறை உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சிவசக்தி நகர் பகுதியில் இருந்து கருப்பகவுண்டன்புதூர் வரை தாந்தோணி கிளை வாய்க்காலில் உள்ள வீடுகள், கட்டிடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தொடங்கினர்.

அப்போது வருவாய் அலுவலர் ஜெயவேல், கிராம நிர்வாக அலுவலர் விஜய் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்துநீர்வளத்துறை உதவி பொறியாளர் கூறுகையில், தாந்தோணி கிளை வாய்க்காலில் ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. விரைவில் ஆக்கிரமிப்பு பணிகள் முடிக்கப்படும், என்றார்.


Next Story