சேலம் பள்ளப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
சேலம் பள்ளப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
சேலம்,
சேலம் பள்ளப்பட்டி ஏரியை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதனை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற தங்களுக்கு கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் நேற்று பள்ளப்பட்டி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் போன்றவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. முன்னதாக பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த பொருட்களை பத்திரமாக அங்கிருந்து எடுத்து சென்றனர்.