மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x

மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.

செங்கல்பட்டு

தாவரவியல் பூங்கா

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கடம்பூர் கிராமத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்து வந்தனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறையினர் முறைப்படி நோட்டீஸ் வழங்கி வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த 14 பேரில் 12 பேர் அங்கிருந்து வீட்டை காலி செய்து கொண்டு வெளியேறி விட்டனர். அதில் மாடி வீடு கட்டி இருந்த 2 பேர் மட்டும் வீட்டை காலி செய்யாமல் அங்கே குடியிருந்து வந்தனர்.

வீடுகள் அகற்றம்

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் வருவாய்த்துறையினர் தாம்பரம் மாநகர துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், உதவி கமிஷனர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டை இடிப்பதற்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது வீட்டு உரிமையாளர்கள் எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

அதிகாரிகள், உங்களுக்கு ஏற்கனவே பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து அரசு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இடையூறு செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை அடிப்படையில் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு 2 பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தரைமட்டமாக்கினார்கள். இதனால் கடம்பூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. இனி அடுத்த கட்டமாக 350 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றார்.


Next Story