ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகள்

பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி கிருஷ்ணகுமார் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நெடுஞ் சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.

அப்போது சிலர் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதை உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன் ஆய்வு செய்தார். அப்போது உதவி பொறியாளர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது. தபால் நிலையத்தில் இருந்து சப்-கலெக்டர் அலுவலகம் வழியாக நகராட்சி அலுவலகம் வரையும், உடுமலை ரோடு தேர்நிலை திடலில் இருந்து பல்லடம் ரோட்டில் டி.கோட் டாம்பட்டி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

சாலையோரங்களில் இருந்த பழக்கடை, பூக்கடை உள்பட தள்ளு வண்டிகளை உரிமையாளர்களே அகற்றி கொண்டனர். பொக்லைன் எந்திரம் மூலமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. போக்குவரத்திற்கு இடையூறாக மீண்டும் சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிரந்தர தீர்வு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு உள்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கடைகளை அதிகாரிகள் அகற்றுவதும், அங்கு மீண்டும் கடைகள் அமைப்பதும் தொடர்கதையாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.


Next Story