நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வால்பாறையில் நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.
வால்பாறை
வால்பாறையில் நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.
தற்காலிக கடைகள்
வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள், நகராட்சிக்கு முறையாக வரிகளை செலுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் வியாபாரம் பாதிக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையிலும் சாலையை ஆக்கிரமித்து வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தற்காலிக கடைகளை அமைத்து வந்தனர்.
இது தொடர்பாக நகராட்சி வரி வசூல் அதிகாரிகளிடம், மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், வால்பாறையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில்தான் வியாபாரம் அதிகளவில் இருக்கும். தற்காலிக கடைக்காரர்களால் எங்களது வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் கூட விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
வாக்குவாதம்
இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று, மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அகற்றினர்.
அப்போது அந்த கடைகளை நடத்தி வந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது. மேலும் ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை நம்பி காய்கறிகளை வாங்கி வந்து விட்டோம், ஒரு வாரம் மட்டும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்த ஒரு வாரம் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடைகளை நடத்தி கொள்ள அனுமதி பெற்று கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.