நாமக்கல்லில் கோவில், பஸ் நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமி கோவில்கள் உள்ளன. இக்கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏற்படுவதாகவும் நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து கலெக்டர் உமா உத்தரவின்பேரில், நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் மற்றும் வணிக ரீதியான கடைகள் கோவில் அருகே வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து, அமைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதேபோல் நாமக்கல் பஸ்நிலையம் மற்றும் நேதாஜி சிலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன.
இது குறித்து உதவி கலெக்டர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல்லில் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமி கோவில்களின் அருகில் உள்ள வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த, கடைகளின் முகப்புகளை அகற்றி உள்ளோம். இதேபோல் பஸ்நிலையம், கடைவீதி பகுதிகளிலும் ஆக்கிரப்புகளை அகற்றி வருகிறோம். கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து அவரவர் கடைகளுக்கு, அருகில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பகுதிகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நகராட்சி பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.