பயணிகள் நிழற்குடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
போடி அருகே பயணிகள் நிழற்குடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் நிழற்குடை கட்டிடத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண் ஒருவர் ஆக்கிரமித்து, அதனை ஓட்டலாக பயன்படுத்தி வந்தார். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நிழற்குடையை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
வெயில், மழைக்காலங்களில் சாலையில் காத்திருக்கும் அவல நிலை நீடித்து வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கும், அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவருக்கும் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து பயணிகள் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை போடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு, அணைக்கரைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வனிதா மற்றும் போடி தாலுகா போலீசார் ஆகியோர் முன்னிலையில் நிழற்குடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகறப்பட்டது. இருப்பினும் பயணிகள் நிழற்குடை கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிது. எனவே நிழற்குடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.