வத்தலக்குண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வத்தலக்குண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
வத்தலக்குண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் அன்பையா மற்றும் அதிகாரிகள் வத்தலக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, சாலையோர ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றுமாறு அதிகாரிகள் சார்பில் கால அவகாசத்துடன் அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர். இருப்பினும் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர்.
இந்தநிலையில் இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள், வத்தலக்குண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.