கூடலூரில் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கூடலூரில் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

கூடலூரில் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தேனி

கூடலூர் நகரின் மைய பகுதியில் ஒட்டாண்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து வைரவன் வாய்க்கால் மூலமாகவும், 18-ம் கால்வாய் வழியாகவும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தேக்கி வைக்கப்படுகிறது. இதன்மூலம் அப்பகுதியில் 406 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் செய்யப்படுகிறது. 72 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒட்டாண்குளம் ஆக்கிரமிப்பால் தற்போது 60 ஏக்கர் பரப்பளவாக சுருங்கிவிட்டது. குளத்தின் ஆக்கிரமிப்பு பகுதியில் சிலர் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தநிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தி தலைமையில் உதவி பொறியாளர் பிரேம்ராஜ்குமார், நில அளவையாளர் கருப்பசாமி, கம்பம் வருவாய் அலுவலர் நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் அமாவாசை ஆகியோர் இன்று கூடலூர் ஒட்டாண்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வாழை, தென்னை மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story