நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

பரதராமியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் அடுத்த பரதராமி பஜார் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.4½ கோடி மதிப்பீட்டில் பரதராமியை அடுத்த அங்கனாம்பள்ளி கூட்ரோட்டில் இருந்து பரதராமி இந்திரா நகர் வரை 1.6 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டர் அகலத்திற்கு அகலப்படுத்தி இரண்டு பக்கமும் கால்வாய்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் பணிகளை தொடங்க அங்கனாம்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்து பரதராமி இந்திரா நகர் வரை இரண்டு பக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள்.

நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், இளநிலை பொறியாளர் யோகராஜ், சாலை ஆய்வாளர் சபிதா உள்ளிட்ட நெடுஞ்சாலை துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர். கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையில் பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1 More update

Next Story