தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது வியாபாரிகள் மீண்டும் கால அவகாசம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது வியாபாரிகள் மீண்டும் கால அவகாசம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெருக்கள் ஆக்கிரமிப்பு

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தெற்கு அலங்கத்தையும், தெற்கு வீதியையும் இணைக்கும் வகையில் மாட்டுமேஸ்திரி சந்து உள்ளிட்ட நான்கு தெருக்கள் உள்ளது. இந்த தெருக்களில் உள்ள வீடுகள் அனைத்தும் வியாபார நிறுவனங்களாக மாறியது. இதனால் இந்த தெருக்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும்.

பழைய பஸ் நிலையத்தில் இறங்கி தெற்கு வீதியில் உள்ள பள்ளிகளுக்கும், அய்யங்கடைத் தெரு, காமராஜர் மார்க்கெட்டுக்கு செல்ல இந்த தெருவே பிரதானமாக இருந்து வருகிறது. இந்த தெருக்களில் உள்ள கடைகளின் முன்பு வியாபாரிகள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து இங்கு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அங்கிருந்த வியாபாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். இல்லாவிட்டால் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி நேற்று மாநகராட்சி உதவி பொறியாளர் கண்ணதாசன் மற்றும் அதிகாரிகள் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்தனர். வியாபாரிகள் திரண்டு வந்து நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்கிறோம். மீண்டும் காலஅவகாசம் வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே உரிய காலஅவகாசம் வழங்கப்பட்டு விட்டது. உடனே அகற்றுங்கள் என்றனர்.

போலீசார் குவிப்பு

அதற்குள் சம்பவ இடத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதியில் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.


Next Story