தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 13 March 2023 7:00 PM GMT (Updated: 13 March 2023 7:00 PM GMT)

ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

ராஜவாய்க்கால்

தேனியில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்காக ராஜவாய்க்கால் அமைக்கப்பட்டது. இந்த ராஜவாய்க்கால் சுமார் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த வாய்க்கால் மூலம் நேரடியாக 222.27 ஏக்கர் நிலங்களும், கண்மாய் மூலம் 111.54 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்றன.

இந்த வாய்க்கால் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்தது. வீடுகள், வணிக கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு பெருகியதால், வாய்க்கால் பரப்பளவு சுருங்கியதோடு, தூர்வாரப்படாமல் தூர்ந்து போனது. இதனால், வாய்க்காலை நம்பி இருந்த விளை நிலங்கள் வீட்டடி மனைகளாக மாறின. அவ்வாறு வீடுகள் கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை, பாதாள சாக்கடை வசதி போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அதேநேரத்தில் தூர்ந்துபோன ராஜவாய்க்காலில் மழைநீர் கூட வடிந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேனியில் பலத்த மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் குளமாக தேங்கியது.

கோர்ட்டு உத்தரவு

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாய்க்காலில் கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. தூர்வாரும் பணி மேற்கொண்டு தீவிரம் அடைந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று தேனியை சேர்ந்த ராஜதுரை என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 160-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து தலைமையில், தாசில்தார் சரவணபாபு, பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர்கள் பாஷித்கான், ஷியாம்சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

பழைய பஸ் நிலையம் எதிரே வணிக கட்டிடங்கள், கட்டண கழிப்பிடம், மனமகிழ் மன்ற சுற்றுச்சுவர் ஆகியவை முதற்கட்டமாக பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள வணிக வளாக கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்தது. வாய்க்காலை ஆக்கிரமித்து நடத்தி வந்த அரசு மதுபான கூட கட்டிடத்தின் ஒரு பகுதியும் இடித்து அகற்றப்பட்டன.

சாலை மறியல்

இதற்கிடையே ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாமேடு-மதுரை சாலையில் பொதுமக்கள் சிலர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் வீடுகளை இடிக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து மக்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் அங்கு வந்த ஆர்.டி.ஓ. சிந்து பேச்சுவார்த்தை நடத்தினார். வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்படுவதாகவும், மாற்று இடம் கொடுக்காமல் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story