சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

சாத்தான்குளம் அருகே ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு அமுதுண்ணாகுடியைச் சேர்ந்தவர் செல்வகுருஸ். இவர் அமுதுண்ணாகுடியில் கருமேனியாற்று ஓடை புறம்போக்கில் தனிநபர்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள காம்பவுண்டு சுவர்கள் மற்றும் குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி குடியிருப்புகளை அகற்றுவதற்கு முன்பு அந்த குடியிருப்பில் உள்ள தகுதியான 4 பேருக்கு சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா வேறு இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மூலைக்கரைப்பட்டி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆவுடைநாயகம், தாசில்தார் ரதிகலா ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் காம்பவுண்டு சுவர்கள் இடித்து அகற்றப்பட்டன. மூலைக்கரைப்பட்டி நீர்வளத்துறை உதவி பொறியாளர் ரமேஷ்குமார், சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளர் பிரஷ்யா நிறையா, நில அளவையாளர் தேவிகா, சாத்தான்குளம் கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளி குமார் மற்றும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மொத்தம் 6 குடியிருப்புகள், 5 காம்பவுண்டு சுவர்கள் அகற்றப்பட்டன.


Next Story