பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்புகள்
மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக 2 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சென்னை, சிதம்பரம், கும்பகோணம், பூம்புகார், மணல்மேடு ஆகிய மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் அனைத்தும் காமராஜர் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன.முக்கியத்துவம் வாய்ந்த இந்த காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் நடந்து சென்று வரவும், பஸ்கள் எளிதாக பஸ் நிலையத்திற்கு நுழைவதற்கும் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து கடந்த ஆண்டு 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி பிரசுரமானது. அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அகற்றம்
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பஸ் நிலைய நுழைவாயில் பகுதிகளில் கடைகள் ஆக்கிரமிக்க தொடங்கின. இதுகுறித்து நகர சபை கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.அதன் எதிரொலியாக நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி உத்தரவின் பேரில் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தப்படும் என்று நேற்றுமுன்தினம் நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நேற்று காலை முதல் போலீசார் முன்னிலையில் நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், வருவாய் அலுவலர் செல்வி, மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கடைகளை பொக்லின் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
பாதுகாப்பு பணி
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கு பஸ் டிரைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் கடைகளின் எல்லைகள் அளவீடு செய்து வரையறுக்கப்பட்டு விரைவில் முழுமையாக பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினர்.