பீமநகர் ஹீபர்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பீமநகர் ஹீபர்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

பீமநகர் ஹீபர்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருச்சி

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பீமநகர் ஹீபர்ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாகவும், அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை பீமநகர் ஹீபர்ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 டிப்பர் லாரிகளுடன் அந்த பகுதியில் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து இருந்த மேற்கூரைகள், தகர கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். முன்அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகளையும் அகற்றினர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பீமநகரில் இருந்து கோர்ட்டு வரை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதேபோல் துவரங்குறிச்சியில் உள்ள பூதநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள நேதாஜி நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ராமசாமி என்பவர் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஆக்கிரமிப்பில் உள்ள இந்த வீட்டை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை அடுத்து கடந்த 2-ந் தேதி பொன்னம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது ராமசாமி தனது வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததுடன் கால அவகாசம் வழங்கக்கோரி வீட்டிலிருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து ராமசாமிக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நேற்று வரை அவகாசம் வழங்கி இருந்தனர். அவகாசம் முடிவடைந்த நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் வீட்டினுள் இருந்த பொருட்களையும், ஆஸ்பெட்டாஸ் ஓடுகளையும் பத்திரமாக அப்புறப்படுத்திவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டை இடித்து தரை மட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story