அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மற்றும் அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

கரூர்

அரசுக்கு சொந்தமான இடம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுமருதூர் கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க இங்குள்ள அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்துகொள்ள அந்த இடத்தை அளவீடு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்றனர். அங்கு அரசுக்கு சொந்தமாக உள்ள இடத்தில் இருந்த முள்செடிகளை அகற்றிச்சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு விதியின்படி வீட்டுமனை இல்லாதவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். எனவே வீட்டுமனை இல்லாதவர்கள் மனு அளிக்கலாம் என கோட்டாட்சியர் புஷ்பா தேவி சம்பவத்தன்று பொதுமக்களிடம் தெரிவித்துச் சென்றார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் வருவாய் துறை மற்றும் போலீசார் முன்னிலையில் மேட்டுமருதூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி மற்றும் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் என்பதால், இந்த இடத்தில் வீடோ, குடிசையோ அமைக்கக்கூடாது என்றும், மரம் வெட்டவோ வெட்டிய மரத்தை எடுத்துச் செல்வதோ சட்டப்படி குற்றம் என்றும், இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story