திருவாரூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருவாரூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

திருவாரூர் கடைவீதியில் நகராட்சி-நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்


திருவாரூர் கடைவீதியில் நகராட்சி-நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன போக்குவரத்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன விபத்துக்களும் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் கடைவீதியில் எந்த நேரமும் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடைகளின் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் திருவாரூர் கடைவீதியில் போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இல்லையென்றால் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என திருவாரூர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து நேற்று திருவாரூர் கடைவீதியில் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கடைகளுக்கு முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இ்தில் ஒரு சில கடைகள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாத நிலையில், திருவாரூர் நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமையில் நகர அமைப்பு அலுவலர் முருகானந்தம், நகர அமைப்பு ஆய்வாளர் ரகுநாதன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

பொதுமக்கள் வரவேற்பு

அப்போது சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த விளம்பர பலகைகள், கடைகளில் எல்லை தாண்டிய கூரைகள், கட்டுமானங்கள் அனைத்து பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் கடைவீதியில் போக்குவரத்து இடையூறு இன்றி வாகனங்கள் சென்று வந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும் வர்த்தகர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு அவர்களுடன் பேசி போக்குவரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



Next Story