ஆபத்தான இரும்பு கம்பிகள் அகற்றம்
ஆபத்தான இரும்பு கம்பிகள் அகற்றம்
சிங்கம்புணரி
சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. சிங்கம்புணரியை சுற்றி 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சிங்கம்புணரி பஸ் நிலையத்துக்கு வந்து தான் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். இந்த பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன. இப்பகுதியின் மேல் உள்ள கட்டிடத்தில் விளம்பர போர்டுகள் வைப்பதற்காக இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இது வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் துருப்பிடித்து காணப்பட்டன. அவை எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் பயணிகள் அச்சத்துடன் இருந்தனர்.
இது தொடர்பாக கடந்த 21-ந் தேதி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிெராலியாக பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய வகையில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் பயணிகள் நலன்கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.