இந்திராகாந்தி சிலையின் இரும்பு படிக்கட்டு அகற்றம்: நடைபயணம் சென்ற காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் கைது


இந்திராகாந்தி சிலையின் இரும்பு படிக்கட்டு அகற்றம்: நடைபயணம் சென்ற காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் கைது
x

இந்திரா காந்தி சிலையின் இரும்பு படிக்கட்டு அகற்றியதை கண்டித்து நடைபயணம் சென்ற காங்கிரஸ் கட்சி மாநில சிறுபான்மைபிரிவு தலைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பஸ் நிலையத்தின் அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த படிக்கட்டுகளை கடந்த 20-ந் தேதி மர்ம நபர்கள் உடைத்து அகற்றி உள்ளனர். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாணியம்பாடி- திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் இந்திரா காந்தி சிலையின் ஏணி படியை அகற்றிய நபர்களை கைது செய்யக்கோரியும், உடைக்கப்பட்ட படிக்கட்டை சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் அமைக்கக் கோரியும், காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை 25 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மனு அளிக்க முடிவு செய்தார்.

நடைபயணம்

அதன்படி நேற்று காலை இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தனது நடை பயணத்தை தொடங்கினார். அவருடன் 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் நடைபயணம் சுமார் 2 கி.மீ. தூரத்தை கடந்து சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அஸ்லம் பாஷாவை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கி சென்று கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவருடன் சென்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் உள்ள இந்திரா காந்தி சிலை அருகே இருந்த இரும்பு படிக்கட்டை மீண்டும் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதன் பேரில் சிலை அருகே மீண்டும் அதே இடத்தில் இரும்பு படிக்கட்டு பொருத்தப்பட்டது. அதன்பின்பு கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story