போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரத்துண்டுகள் அகற்றம்
கூடலூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மரத்துண்டுகள் கிடந்தன. ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மரத்துண்டுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மரத்துண்டுகள் கிடந்தன. 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மரத்துண்டுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆபத்தான மரங்கள்
கூடலூர் பகுதியில் 2 வாரங்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இதனால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து வருவாய் துறையினர் உள்பட பல்வேறு துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், சாலையோரம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை கண்டறிந்து வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது.
மரத்துண்டுகள் அகற்றம்
இதில் கூடலூர்-ஓவேலி செல்லும் சாலை உள்பட பல பகுதிகளில் வெட்டப்பட்ட ஆபத்தான மரங்கள் மற்றும் அதன் துண்டுகள் அகற்றப்படாமல் கிடந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கூடலூர் பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கிடந்த மரங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூடலூர்-ஓவேலி சாலையோரம் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கும், நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.