குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்

கோயம்புத்தூர்

கோவை

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்பு வீடுகள்

கோவை மாநகர பகுதியில் உக்கடம் பெரியகுளம், வாலாங் குளம், குறிச்சி குளம், செல்வசிந்தாமணி குளம் உள்பட ஏராள மான குளங்கள் உள்ளன. அவை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குறிச்சி குளக்கரை காந்திநகர் பகுதியில் 173 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. அந்த வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக அந்த வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மின்இணைப்பு துண்டிப்பு

இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றனர்.

உடனே குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்ய மறுத்தனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த வீடுகளின் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இடித்து அகற்றம்

இதையடுத்து பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் ஆக்கிர மிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டு விட்டது. பலமுறை நோட்டீசு வழங்கியும் அவர்கள் வீடுகளை காலி செய்ய வில்லை.

எனவே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 173 வீடுகளில் நேற்று மட்டும் 42 வீடுகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. 37 வீடுகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி இன்றும் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பணி முடிந்த பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குறிச்சி குளக்கரையை அழகுபடுத்தும் பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story