'யார் சாமி நீ...!' கலெக்டர் பங்களாவை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பங்களாவை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்த பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலம் மோசடி பத்திரங்களை பதிவு செய்தல், ஒரே இடத்தை பலருக்கு பத்திரப்பதிவு செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் அரங்கேறி வருகிறது.ஆனால் இங்கு ஒரு நபர் கலெக்டர் பங்களாவையே தனிநபர் ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதையும் முறையாக விசாரிக்காமல் அரசு அதிகாரி ஒருவர் பத்திரப்பதிவு செய்து கொடுத்து சிக்கி உள்ளார்.
பத்திரப்பதிவு
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கள்ளக்குறிச்சி அருகே திருவங்கூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர், கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஒரு இடத்தை கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரி ரோட்டில் வசிக்கும் மற்றொரு நபருக்கு கிரையம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி கடந்த 7.12.22 அன்று கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் எண்-2 அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர். பின்னர் அங்கு பணியில் இருந்த சார் பதிவாளர் கதிரவன் மூலம் அந்த இடம் கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரி ரோட்டில் வசித்து வந்த நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதையடுத்து அந்த இடத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனால் சந்தேகமடைந்த மாவட்ட பதிவாளர் ரூபியாபேகம் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தின் பட்டா, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர்கள் கிரையம் செய்தது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பங்களாவின் ஒரு பகுதி என்று தெரிந்தது.
அதாவது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமான கலெக்டர் பங்களாவை சார்பதிவாளர் கதிரவன் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தெரிய வந்தது. இதுபற்றி மாவட்ட பதிவாளர், சென்னை பதிவுத்துறை தலைவருக்கு புகார் செய்தார். இதையடுத்து கலெக்டர் பங்களாவை தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் கதிரவனை பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) செய்து பதிவுத்துறை தலைவர் சிவனருள் நடவடிக்கை எடுத்துள்ளார்.