மேம்பால தூண்களில் சுவரொட்டிகளை அகற்றும் பணி


மேம்பால தூண்களில் சுவரொட்டிகளை அகற்றும் பணி
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை- அவினாசி ரோடு மேம்பால தூண்களில் சுவரொட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்


கோவை

கோவை- அவினாசி ரோடு மேம்பால தூண்களில் சுவரொட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

மேம்பாலம் தூண்கள்

கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை- அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,600 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக மொத்தம் 305 தூண்கள் அமைக்க வேண்டும். தற்போது வரை 286 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் சில இடங்களில் தூண்களுக்கு மேல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுவரொட்டிகளை அகற்றும் பணி

இந்த நிலையில், அந்த மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் அதிகளவில் ஒட்டப்பட்டு உள்ளன. அவை வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருக்கிறது.

எனவே மேம் பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ஆனால் அதையும் மீறி பல இடங்களில் கான்கிரீட் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்ட னர்.

அவர்கள் சுவரொட்டிகளில் தண்ணீர் பீய்ச்சி அடித்து நன்றாக நனைந்ததும் கிழித்து அகற்றி வருகிறார்கள்.

இது குறித்து மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

கோவை -அவினாசி ரோடு மேம்பால தூண்களில் 85 சதவீதம் அளவுக்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. அதை வாகன ஓட்டிகள் பார்த்தபடி செல்வதால் விபத்து ஏற்படுகிறது.

எனவே தூண்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி வருகிறோம். இதையடுத்து தூண்களில் வெள்ளை அடிக்கப்படும்.

அதன்பிறகு பெயிண்ட் அடித்து வரலாற்று சின்னங்கள் வரையப்படும். எனவே மேம்பால தூண்களில் யாரும் சுவரொட்டி ஒட்டக்கூடாது. வர்ணம் தீட்டிய பிறகு சுவரொட்டிகள் ஒட்டினால் பாரபட்ச மின்றி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story