105 கடைகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
105 கடைகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
செல்வபுரம்
கோவை செல்வபுரத்தில் உள்ள சிவாலயா சந்திப்பில் இருக்கும் ராமமூர்த்தி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது. சாலையின் இருபுறத்திலும் உள்ள நடைபாதையை அந்தப்பகுதியில் உள்ள கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அந்தந்த கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் உரிமையாளர்கள் ஆக்கிமிப்புகளை அகற்றவில்லை.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவின்பேரில், நகரமைப்பு அதிகாரி குமார், உதவி நகரமைப்பு அதிகாரி ஜெயலட்சுமி மற்றும் அதிகாரிகள், போலீசார் நேற்று காலையில் அந்த பகுதிக்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து அந்த சாலையின் இருபுறத்திலும் 1 கி.மீ. தூரத்துக்கு இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, செல்வபுரம் பகுதியில் மொத்தம் 105 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுபோன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். எனவே யாரும் நடைபாதையையோ அல்லது சாலையையோ ஆக்கிரமித்து கடைகள் வைக்கக்கூடாது என்றனர்.