முதுமலையில் சாலையோர புதர்கள் அகற்றம்


முதுமலையில் சாலையோர புதர்கள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Sept 2023 2:15 AM IST (Updated: 12 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகள் தாக்குதலை தடுக்க முதுமலையில் சாலையோர புதர்களை வெட்டி அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

வனவிலங்குகள் தாக்குதலை தடுக்க முதுமலையில் சாலையோர புதர்களை வெட்டி அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வனவிலங்குகள்

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் தலைவர்களும் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.

அப்போது சாலையோரம் மற்றும் அப்பகுதியில் உள்ள புதர்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நிற்பதை கண்டு ரசிக்கின்றனர். மேலும் சிலர் ஆபத்தை உணராமல் புகைப்படங்களை எடுத்து அத்துமீறுகின்றனர். அந்த சமயத்தில் சாலையோர புதர்களில் மறைந்திருக்கும் காட்டு யானை, சிறுத்தை புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

புதர்கள் அகற்றம்

ஆனால், இதை அறியாமல் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு வனவிலங்குகளை ரசித்து வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் வனவிலங்குகளிடம் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை கண்டறிந்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் தாக்குதலை தடுக்க சாலையின் இருபுறமும் படர்ந்து காணப்படும் புதர்களை 30 மீட்டர் அகலத்திற்கு வெட்டி அகற்றும் பணியில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது கார்குடி முதல் தொரப்பள்ளி வரை சாலையோர புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் புதரில் மறைந்து உள்ள வனவிலங்குகளை எளிதில் கண்டறிய முடியும். மேலும் வனவிலங்குகளிடம் சுற்றுலா பயணிகள் சிக்காமல் இருக்க பேரூதவியாக இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story