சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் உள்ள 4 முக்கிய வீதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் நேற்று காலை சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர்.
முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து சாலையோர கடைக்காரர்கள், வீட்டின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் தங்கள் இடத்தின் அருகில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினர். மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஆணையாளர் பிரபாகரன், சிதம்பரம் நகர அமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் பகுதி பகுதியாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.